Sunday, May 24, 2020

பட்டியல் (பாகம்-1)

ஏதில்லை என்னிடமென்று எழுதியோர் பட்டியலிட்டுத்
தீதில்லைக் கடனும் வாங்கிக் கனவுகள் மெய்படவெண்ணி
ஏடுகள் சிலவும் எழுதும் கோலொன்றும் கையில் கொண்டு
ஏகாந்தமாய் அமர்ந்து ஏக்கங்கள் பதிய நினைத்தேன்.

வீடில்லை நிலைத்து வாழ நிலமில்லை நெடிதுலாவ
வீட்டுளோர் சேர்ந்து செல்ல விசாலமாய் வாகனமில்லை
பொன்நகை பலவும் இல்லை பொருள்பல வசதிக்கில்லை
எண்ணிய(து) எளிதில் செய்ய ஏவலர் எவருமில்லை.

பல்வகை உணவு படைக்கும் பகட்டான விருந்துகள் இல்லை
பனிமலை கடல்கள் தாண்டி பன்னாட்டுப் பயணங்களில்லை
புதுமைகள் இவ்விடமில்லை புகழில்லை போகமுமில்லை
பட்டியல் நெடிது நீள பக்கங்கள் போதவில்லை.

                                                      - வீச்சுக்கவி 

Monday, August 29, 2016

எண்திசைகள் ஒன்றாகிட

மெல்லிசையே எண்திசைகள் உன்னசைவில் ஒன்றாகிட
பெண்ணழகே உன்விழியில் என்மனதை நான் தொலைத்தேன்
முத்தமிழே மூச்சோடு உன்வாசம் நான் நுகர
சத்தமிலாதென் நெஞ்சில் யுத்தமொன்று மூளுதடி

Monday, August 22, 2016

வரம்


வானமழை உந்தன் மீதுவிழ எந்தன் தேகமெலாம் சிலிர்க்கும்


தேனொழுகும் உன் வாய்மொழிச் சொற்களில் தேகசுகம் பெருகும்


நானுனைக் கானிட நேரிடுமென்பது ஆண்டவன் அற்புதமோ - உயிர்


தானினி போயினும் போகட்டும் மேலொரு போகமும் ஈங்கு உண்டோ.



Friday, December 11, 2015

பாரதி நின்புகழ்

அழகிய கவிதை.
ஆழ்ந்த கருத்து.
இனிய செந்தமிழ்.
ஈடிலா தோரனை.
உள்ளம் உரைக்க
ஊதிய சங்கம்(சங்கு)
எண்ணம் சிறந்து
ஏறுபோல் உழைத்திட
ஐயம் களைந்து
ஒற்றுமை நம்மிடை
ஓங்கிடத் தோன்றிய
பாரதி நின்புகழ்
வானிடை நீந்திடும்
செஞ்சுடர் வாடினும்
வாடாதிருந்து வாழ்ந்திட வாழ்த்துவோம்.

Thursday, April 9, 2015

அசையும் அர்த்தமும்

அசயில்லா அர்த்தமும் இல்லா(த)
உன் ஆறுவரி அசட்டுக் கவிதைக்கு
அடிக்கு ஒருதரம் ஆஹா போடுகிறேன்.
அன்பே,
உன் அசைவில் இல்லா அசையா!
உன் பார்வையில் இல்லா அர்த்தமா!

Friday, October 31, 2014

கண்ணிமை

மூடிய விழிகளில் தேவதை தரிசனம்.
மங்கையே, என் கண்ணிமைகள் நீதானோ!

Thursday, October 9, 2014

சென்னை

வான்தொட்டும்  ஓயாது  உயர்ந்து  எழும் கட்டிடங்கள்
தேன்  சொட்டும்  இனியசுவை  விருந்தளிக்கும்  உணவகங்கள்
கடலலைகள்  தவழ்மடியாம்  மெரினாவின்  பரப்பளவில்
இடம்  பெயர்ந்து  இங்குவந்தோம்  இனியதோர்  வாழ்கை  தேடி!



ஈமொய்க்கும் மாம்பழமாய் இருக்குமிந்த ஊரினிலே
தீபெட்டிக் குடியிருப்பில் வாடகைக்கு இடம்பிடித்தோம்.
போர்க்களமாய் காட்சி தரும் பெருநகரச் சாலைகளை
புழுதிசூழ் பேருந்தில் ஊர்ந்துசென்று உடல் களைத்தோம்.