Sunday, May 24, 2020

பட்டியல் (பாகம்-1)

ஏதில்லை என்னிடமென்று எழுதியோர் பட்டியலிட்டுத்
தீதில்லைக் கடனும் வாங்கிக் கனவுகள் மெய்படவெண்ணி
ஏடுகள் சிலவும் எழுதும் கோலொன்றும் கையில் கொண்டு
ஏகாந்தமாய் அமர்ந்து ஏக்கங்கள் பதிய நினைத்தேன்.

வீடில்லை நிலைத்து வாழ நிலமில்லை நெடிதுலாவ
வீட்டுளோர் சேர்ந்து செல்ல விசாலமாய் வாகனமில்லை
பொன்நகை பலவும் இல்லை பொருள்பல வசதிக்கில்லை
எண்ணிய(து) எளிதில் செய்ய ஏவலர் எவருமில்லை.

பல்வகை உணவு படைக்கும் பகட்டான விருந்துகள் இல்லை
பனிமலை கடல்கள் தாண்டி பன்னாட்டுப் பயணங்களில்லை
புதுமைகள் இவ்விடமில்லை புகழில்லை போகமுமில்லை
பட்டியல் நெடிது நீள பக்கங்கள் போதவில்லை.

                                                      - வீச்சுக்கவி 

No comments:

Post a Comment